Thursday, January 19, 2017

நன்மையே யாவும் நன்மையாய் முடியும் ... ஜல்லிக்கட்டு தொடர்பாக மோடியை சந்தித்த பிறகு ஓ.பி.எஸ் பேட்டி




டெல்லி: ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக அவசர சட்டம் இயற்றக் கோரி, பிரதமர் மோடியை சந்தித்த பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசர சட்டம் பிறப்பிக்குமாறும், மிருகவதை தடை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் கோரியதாக தெரிவித்தார். ஆனால் வழக்கு நிலுவையில் உள்ளதால் இவ்விவகாரத்தில் மத்திய அரசால் தற்போது ஏதும் செய்ய முடியாத சூழல் உள்ளதாக பிரதமர் கூறியதாக தெரிவித்தார். தமிழர்களின் உணர்வுகளை மதிப்பதாகவும், ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தை உணர்ந்துள்ளதாகவும் எனினும் இவ்விகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு ஆதரவளித்து, உறுதுணையாக இருக்கும் என பிரதமர் தெரிவித்ததாக கூறினார். மேலும் பேசிய முதல்வர் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு விரைவில் முடிவெடுக்கும் என்றார். மேலும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மாநில அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள், 'நன்மையே யாவும் நன்மையாய் முடியும்' , பொறுமையாக இருங்கள் என சூசகமாக கூறியுள்ளார். இதனால் ஜல்லிக்கட்டு நடைபெற வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

முன்னதாக மோடியை சந்தித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், மேலும் இக்கலாச்சாரத்தை மத்திய அரசு பாராட்டுவதாகவும் ஆனால் அதே சமயம் ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் பிரதமர் மோடி கைவிரித்து விட்டார். இதனையடுத்து தமிழர்களின் கலாச்சாரமான ஜல்லிக்கட்டை பாராட்டியுள்ள பிரதமர் மோடி, அதனை நடத்துவதற்கு தேவையான சட்ட ரீதியிலான நடவடிக்கைக்கு முயற்சி மேற்கொள்ளாததற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் வரை தங்களின் போராட்டம் ஓயாது என போராட்ட களத்தில் உள்ள இளைஞர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.