Wednesday, August 31, 2016

சுவாதி, சோனாலியை அடுத்து ஒருதலைகாதலால் இன்னொரு விபரீதம் - சர்ச்சில் ஆசிரியைக்கு சரமாரி அரிவாள் வெட்டு ; தூத்துக்குடியில் இன்று காலை பயங்கரம்

தூத்துக்குடி, -  தமிழகத்தில் ஒருதலை காதலால்  இளம் பெண்களை  வாலிபர்கள் கொடூரமாக வெட்டி தாக்கும் சம்பவங்கள் தொடர்வது  மக்களுக்கு பீதியை ஏற்படுத்தி வருகிறது.   தூத்துக்குடியில் இன்று காலை சர்ச்சில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த ஆசிரியைக்கு சரமாரி வெட்டு விழுந்தது. ஒரு தலை காதலால் வாலிபர் இந்த வெறிச்செயலை புரிந்துள்ளார்.
சென்னையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்ஜினியர் சுவாதி, கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். போலீஸ் விசாரணையில் ராம்குமார் என்ற வாலிபர் ஒரு தலை காதலால் இந்த கொலை செய்ததாக தெரிய வந்தது. இதை தொடர்ந்து, கரூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரி மாணவி சோனாலி(21) என்பவர் நேற்று வகுப்பறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். ஒருதலை காதலால் அவருடன் படித்த மாணவரே இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. கொலையான மாணவியின் உடல் மதுரையில் உள்ள மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு செல்லும் முன்பாக, அடுத்த ஒரு தலை காதல் விபரீதம் தூத்துக்குடியில் நடந்துள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:தூத்துக்குடி கீழய சண்முகபுரம் இந்திரா நகரைச்சேர்ந்த நியூமேன் மகள் பிரான்சினா(24). இவர் சண்முகபுரத்தில் உள்ள செயின்ட் பேட்ரிக் சர்ச் மழலையர் பள்ளியில் 3ம் வகுப்பு ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார்வீட்டிற்கும் பள்ளிக்கும் அதிக தூரம் இல்லை என்பதால் நடந்தே பள்ளி செல்வது வழக்கம். பள்ளிக்கு செல்லும் முன் தினமும் பள்ளியை ஒட்டியுள்ள சர்ச்சில் பிரார்த்தனை செய்வார். இதுபோல் இன்று காலை 8.30மணிக்கு அந்த சர்ச்சில் அவர் பிரார்த்தனை செய்தபோது அங்கு அரிவாளுடன் வந்த வாலிபர் கண் இமைக்கும் நேரத்தில் பிரான்சினாவை சரமாரியாக வெட்டினார். பிரான்சினாவுக்கு தலை, கழுத்து, மற்றும் உடல் முழுவதும் வெட்டு விழுந்து ரத்தவெள்ளத்தில் சரிந்தார். அந்த வாலிபர் தப்பியோடி விட்டார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரான்சினாவை பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தென்பாகம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், எஸ்ஐக்கள் ஜீவமணி தர்மராஜ், சந்திசெல்வி ஆகியோர் வந்து விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

பிரான்சினா பள்ளி செல்லும்போது லயன்ஸ் டவுனைச் சேர்ந்த வாலிபர் ஹெலிஸ்டன் என்ற சீகன்(24) என்பவர் பைக்கில் வந்து இவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், பிரான்சினா அவர் காதலை ஏற்க மறுத்ததோடு அவரை கண்டித்துள்ளார். அதையும் மீறி சீகன் தினமும் வந்து தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். அவரது தொல்லை பொறுக்க முடியாத பிரான்சினா, இது பற்றி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, பிரான்சினாவுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர். தூத்துக்குடியில் கப்பலில் வேலைபார்க்கும் ஒருவருடன் பிரான்சினாவுக்கு திருமணம் நிச்சயித்து வருகிற 8ம்தேதி திருமணம் நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதையறிந்து சீகன், நமக்கு கிடைக்காதாவள் வேறு யாருக்கும் கிடைக்ககூடாது என்ற வெறியில் இன்று காலை பிரான்சினா சர்ச்சில் பிரார்த்தனை செய்தபோது அரிவாளால் வெட்டி சாய்த்துள்ளார். பள்ளிக்கு விடுமுறை: பிரான்சினா வெட்டப்பட்ட செய்தியறிந்து அவருடன் வேலைபார்க்கும் ஆசிரியர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன் கூடி கண்ணீர் விட்டு கதறினர். மற்றும் உறவினர்களும் திரண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

வெட்டியவர் தற்கொலை

ஆசிரியையை வெட்டிய சீகன், சம்பவ இடத்தில் இருந்து ஓடிச் சென்று, தூத்துக்குடி மறக்குடி தெருவில் உள்ள உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார். பின்னர், வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்று தூக்கு போட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.