ஒரு மணி நேரத்தில்... தொகுதி முன்னணி நிலவரம்...


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளில் பதிவான ஓட்டுகள், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லூரியில் இன்று எண்ணப்படுகின்றன. எண்ணிக்கை துவங்கப்பட்ட ஒரு மணி நேரத்தில், வெற்றிக்கோட்டை நெருங்கும் வேட்பாளர் யார் என்பது தெரியும்.



தமிழக சட்டசபை தேர்தல், 16ல் நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில், வடக்கு, தெற்கு, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம் என, எட்டு தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் பயன்படுத்திய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. பதிவான ஓட்டுகள், இன்று எண்ணப்படுகின்றன.



அண்ணாதுரை நூற்றாண்டு விழா கட்டடத்தின் தரைத்தளத்தில் பல்லடம் தொகுதிக்கும், முதல்
தளத்தில், திருப்பூர் தெற்கு மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கும், இரண்டாவது தளத்தில் உடுமலை தொகுதிக்கும் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.அக்கட்டடத்தின் எதிரே, மேற்கு நோக்கியுள்ள கட்டடத்தின் தரைத்தளத்தில், காங்கயம் தொகுதிக்கான ஓட்டு எண்ணப்படுகிறது. கல்லூரி கலையரங்கம் பின்புறம் உள்ள கட்டடத்தில், அவிநாசிக்கும், தெற்கு நுழைவாயில் அருகே, வடக்கு தொகுதிக்கும், எதிரே உள்ள கட்டடத்தில், மடத்துக்குளம் தொகுதிக்கும் ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள், "ஸ்ட்ராங் ரூம்'மில் வைக்கப்பட்டு, துணை ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.காலை, 8:00 மணிக்கு, ஓட்டு எண்ணிக்கை துவங்கும். இதுவரை, தபால் ஓட்டு எண்ணி முடித்தபின், "கன்ட்ரோல் யூனிட்'டில் பதிவாகியுள்ள ஓட்டு எண்ணப்படும். இம்முறை, தபால் ஓட்டு மற்றும் இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்களை, ஒரே நேரத்தில் எண்ண உத்தரவிடப்பட்டுள்ளது. இயந்திர ஓட்டு எண்ணிக்கையின் கடைசி சுற்றுக்கு முன், தபால் ஓட்டு எண்ணிக்கையை முடிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

எண்ணிக்கை மேஜை
ஒவ்வொரு தொகுதியிலும், 14 மேஜைகளில், ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும். ஒவ்வொரு மேஜை நடவடிக்கையும், தனி தனி "சிசி டிவி' கேமரா மூலமாக, கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேஜையிலும், ஓட்டு எண்ணிக்கை அலுவலர், மேற்பார்வையாளர் மற்றும் "சூபர்வைசர்' ஆகியோர் இருப்பர்.

"ஸ்ட்ராங் ரூம்'மில் இருந்து, "கன்ட்ரோல் யூனிட்'டுகளை எடுத்து வர, 14 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பணியில், தேர்தல் அலுவலர் நீங்கலாக, 448 பேர் ஈடுபட உள்ளனர். ஓட்டு எண்ணிக்கையை உடனடியாக "ஆன்லைனில்' பதிய, இணையதள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

எத்தனை சுற்று?
பல்லடம் தொகுதியில், 386 ஓட்டுச்சாவடி இருப்பதால், 28 சுற்றுகளாக எண்ணிக்கை இருக்கும். திருப்பூர் வடக்கு தொகுதியில், 24 சுற்று, அவிநாசி, உடுமலை தொகுதிகளுக்கு, தலா, 21 சுற்று, தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம் தொகுதிகளுக்கு, தலா, 20 சுற்று, திருப்பூர் தெற்கு தொகுதிக்கு, 16 சுற்று மட்டும் நடக்கும். சுற்று குறைவாக இருப்பதால், தெற்கு தொகுதி முடிவு,
முதலாவதாக தெரியவரும்.



ஓட்டு எண்ணிக்கை முடிவு, சுற்று வாரியாக, "எல்.இ.டி., டிவி' மூலம், கல்லூரி வளாகத்துக்குள்ளும், வெளியேயும் ஒளிபரப்பு செய்யப்படும். ஒவ்வொரு சுற்று முடிந்த பின், மாவட்ட தேர்தல் அலுவலர், எண்ணிக்கை முடிவை "மைக்' மூலமாக அறிவிக்க உள்ளார். ஓட்டுப்பதிவு துவங்கிய ஒரு மணி நேரத்தில், முன்னணி வேட்பாளர் குறித்த விவரம் தெரியவரும்.

ஓட்டுக்கள் எண்ணுவது எப்படி?
ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, தேர்தல் கமிஷன் பல்வேறு வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. வேட்பாளர் ஏஜன்டுகள் உட்பட, யாரும் "மொபைல்' போன், பேனா எடுத்து வரக்கூடாது. பேனா மட்டும் எண்ணிக்கை மையத்தில் வழங்கப்படும்.
ஏஜன்டுகள், அலுவலர்கள் அனைவரும், கட்டாயம்"பேட்ஜ்' அணிந்திருக்க வேண்டும். தேவையான முன்னேற்பாடு செய்ய, காலை, 6:00 மணிக்கே, அலுவலர்களும், ஏஜன்டுகளும் ஆஜராக வேண்டும். ஒவ்வொரு மேஜையிலும், எண்ணிக்கைக்கு வரும், "கன்ட்ரோல் யூனிட்' எண் மற்றும் ஓட்டுச்சாவடி விவரம் ஒட்டப்பட்டிருக்கும்.

"கன்ட்ரோல் யூனிட்'டையும், ஓட்டுச்சாவடியில் பெறப்பட்ட, ஓட்டுப்பதிவு விவரம் அடங்கிய, 17 "சி' படிவத்தையும், ஊழியர்கள் மேஜையில் ஒப்படைப்பர். மேற்பார்வை அலுவலர், படிவம் 17
"சி'யை எடுத்து வைக்க வேண்டும். எண்ணிக்கை அலுவலர், "கன்ட்ரோல் யூனிட்'டின், மேற்புறம் உள்ள பேப்பர் "சீலை' அகற்றி விட்டு, "ரிசல்ட்' பகுதியில் உள்ள சிறிய வெளிப்புற கதவை திறந்து, "ஆன்' செய்ய வேண்டும். அப்போது, மொத்த வேட்பாளர்; மொத்தம் பதிவான ஓட்டு விவரம் திரையில் தெரியும்.



உடனே, படிவத்தில் உள்ள ஓட்டுப்பதிவு எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். மாறுபாடு இருந்தால், ஓட்டு எண்ணாமல், தேர்தல் அலுவலரிடம் "யூனிட்' ஒப்படைக்கப்படும்.
எண்ணிக்கை சரியாக இருந்தால் "ரிசல்ட்' பகுதியில் உள்ள "மஞ்சள் நிற பேப்பர் "சீலை' கிழித்த,
"ரிசல்ட்' பட்டனை அழுத்தினால், வேட்பாளர்கள் வரிசை எண் வாரியாக, ஓட்டு விவரம் திரையில் தெரியும். உடனுக்குடன், படிவம்17 "சி' இரண்டாம் பக்கத்தில், வேட்பாளர் பெயருடன், ஓட்டு விவரத்தை குறித்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மேஜையில் இருந்தும், ஓட்டு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்ட படிவம்17 "சி'யில், ஏஜன்டுகள், "மைக்ரோ அப்சர்வர்' கையொப்பம் பெற்று, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளிக்க வேண்டும். ஒரு சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிந்து, தேர்தல் பார்வையாளர் ஒப்புதலுடன், ஒரு சுற்று முடிவில், வேட்பாளர்கள் பெற்றுள்ள ஓட்டு குறித்த விவரம் வெளியிடப்படும்.
ஓட்டு எண்ணிக்கை முடிந்தபின், மீண்டும் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு, தேர்தல் பார்வையாளர், மாவட்ட தேர்தல் அலுவலர் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வெற்றி பெற்ற வேட்பாளருக்கு சான்றிதழ் வழங்குவர் என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரோந்து செல்ல அறிவுறுத்தல்
எண்ணிக்கை மையத்தில் வேட்பாளர், ஏஜன்ட்கள் வந்து செல்லவும், எண்ணிக்கை பணி அலுவலர் வந்து செல்லவும், தனித்தனி நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையத்துக்கு வருவோர், சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அடை யாள அட்டை இருந்தால் அனுமதிக்கப்படுவர்.

மதுக்கடை மற்றும் பார்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக மது விற்பனை; எண்ணிக்கை முடிவு வரும் நேரத்தில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையிலும், தேவையற்ற கூட்டம் கூடுவதை தவிர்க் கவும், போலீசார் ரோந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Share on Google Plus

About Unknown